Social Master#1
Social Master
New Member
13/11/2018, 3:17 pm
சினிமா என்பது என் ரத்தத்தில் ஊரிப்போன ஒன்று. அந்த அளவிற்கு சினிமாவை நான் சுவாசிப்பவன். எல்லா இடங்களிலும் சினிமாக்காரன் என்பதுதான் எனக்கான முதல் அடையாளமாக இருந்திருக்கிறது. அதே போலவே அரசியலையும் இன்னொரு கண்ணாக வைத்து கவனித்து வந்திருக்கிறேன். சினிமாவும் அரசியலும் எனக்கு இரண்டு கண்களைத் போன்றவை. அதனால்தான் பல இடங்களில் கண்களை எனது லோகோவாக பயன்படுத்தி வந்துள்ளேன்.

சினிமா என்பது அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அதி சக்திவாய்ந்த ஒரு மீடியா. அரசியல் சித்து வேலைகளை மக்களுக்கு தோலுரித்துக் காட்டுவதில் பத்திரிக்கையை விட சினிமாவின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதை பல நேரங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். சில இடங்களில் மேற்கோளும் காட்டியிருக்கிறேன். இந்த சக்தி வாய்ந்த மீடியா இன்று சிலரின் சுயநலத்திற்கான பிரச்சார மேடையாகி வருவதைப் பார்க்கும்போது ஏற்படும் ஆதங்கத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை...

பல காலங்களாகவே இந்த சினிமா தடம் புரண்டு, தட்டுத் தடுமாறிதான் பயணித்து வந்திருக்கிறது. ஆனால் சமீப காலமாக தனது இயல்பையும் இழந்து விடுமோ என்று நினைக்கும்போது வேதனையாகவே இருக்கிறது...  ஜாதியை வளர்ப்பவர்கள் முதல் அரசியலில் ஆதாயம் தேடுபவர்கள் வரை தங்களது சொந்த விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்தும் ஒரு பிரச்சார மேடையாகவே சினிமாவைப் பயன்படுத்த முயல்வது கண்டிக்கத் தக்கதாகும். ஏனென்றால் இது மக்களையும், ரசிகனையும் முட்டாளாக்கும் ஒரு முயற்சியாகும்.! அதாவது சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை தனது சொந்த செலவில் தயாராகும் சினிமாவில் புகுத்துவது என்பது மிகவும் பாராட்டுக்குறிய விஷயமாகும். காரணம் ஆரம்பகால சினிமாவில் இது லாபநோக்கம் இன்றி பொது நலத்திற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று, சொந்த லாபத்திற்காகவும், சிலரது தனிப்பட்ட விளம்பரத்திற்காகவும் மக்களை முட்டாளாக்கி, திரையரங்கை பிரச்சார மேடையாக்கி, விழிப்புணர்ச்சி என்ற பெயரில் சினிமாவை வியாபாரமாக்கி வருவதை ஊக்குவிக்க முடியாது. இது சினிமா என்னும் கலையை குழிதோண்டிப் புதைப்பதற்கு சமமானது.!!

முன்பெல்லாம் பணம் கொடுத்து, சாப்பாடு கொடுத்து, லாரி, வேன் மூலம் சொந்த செலவில் அழைத்துச் சென்று அரசியல் பிரச்சாரம் செய்தனர். ஆனால் இன்று, பிளாக் டிக்கெட்டோடு பாப்கார்ன், பார்க்கிங் என்று மொத்தமாக வசூலித்து பிரச்சாரம் செய்கின்றனர். இது வியாபார யுத்தியா? அல்லது விழிப்புணர்ச்சியா? என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

ஒரு மனிதன் தனது இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி ஒரு மாற்றத்தை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தில்தான் ரசிகனாக மாறி ஓவியம், இசை, நடனம், கேளிக்கை, சினிமா என்னும் மாய பிம்பங்களைத் தேடிச் செல்கிறான். ஆனால் அங்கேயும் அழுகை, ஆர்ப்பாட்டம், அரசியல் என்று அதே இயல்பு வாழ்க்கையே காட்டப்படும்போது அவனது மனநிலை ஏமாற்றமடைகிறது. இதைப் பார்கும் ஒரு ரசிகன் திரையரங்கில் கை தட்டலாம், விசிலடித்து ஆரவாரம் செய்யலாம்... ஆனால் இவை எல்லாமே அவனது மூளையின் உத்தரவுகளே தவிர, ரசிகனின் ஆழ்மனதின் வெளிப்பாடு இல்லை. ஒரு ரசிகனின் மனநிலை எப்போதும் இயல்பு வாழ்க்கையை திரையில் காண்பதை விரும்புவதே இல்லை. அதனால்தான் சினிமா எப்போதும் நிஜ வாழ்விலிருந்து மாறுபட்டதாகவே இருந்திருக்கிறது என்பதை சிலர் புரிந்து கொள்ள வேணடியது அவசியம். சினிமாவின் இந்த இயல்பு சில நேரங்களில் மாற்றியும் கையாளப்பட்டு இருக்கிறது. காரணம் அன்றைய காலகட்டத்தில் வேறு வடிகால்களும் மாற்று வழிகளும் இல்லை என்பதாலேயே சினிமா தனது இயல்பை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் செயல்பட்டுள்ளது. ஆனால் இன்று நிறைய மாற்று வழிகள் இருக்கிறது. எனவே சினிமாவிற்குள் இயல்பு வாழ்க்கையை திணிக்காமல் இருப்பதே சிறந்ததாகும். அதற்காக எதையுமே பேசவேண்டாம் என்பது பொருள் இல்லை. எதுவுமே அளவோடு இருப்பது நல்லது.

இன்று சொப்பு வைத்து விளையாடும் சிறுவர்கள் கூட சோஷியல் மீடியாக்களில் டிரெண்டிங் செய்து டாக் செய்கிறார்கள்... பேசவே தெரியாதவர்கள் கூட ஃபேஸ்புக்கில் ஃபேமஸ் ஆகிறார்கள். டம்மி பீஸ் எல்லாம் டிவிட்டரில் டிரெண்டிங் செய்கிறார்கள்... ஆன்ட்ராய்டு போன் உள்ள எல்லோரும் அரசியலை அலசுகிறார்கள், டப்பா வைத்து விளையாடும் குழந்தைகள் கூட டப்ஸ்மேஷ் காட்டி டாப் ஸ்டார் ஆகிறார்கள்... ஆனால் கிராஃபிக்ஸ், அனிமேஷன், ஸ்பெஷல் எஃபெக்ட், சவுண்ட் சிஸ்டம் என்று ஒட்டு மொத்த டிஜிட்டல் டெக்னாலஜியையும் கையில் வைத்துக் கொண்டு பின்னோக்கியே சென்று கொண்டிருந்தால் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெறலாமே தவிர படைப்பாளர்கள் வரலாற்றில் இடம் பெறுவது கடினம். திறமையானவர்கள் எல்லாம் தடம் பதிப்பதை விட்டு தடம் மாறிச் செல்வது சினிமாவிற்கு ஆரோக்கியமானதில்லை.!!

சினிமாவையும் சினிமாக்காரர்களையும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவன்தான் நான். இப்போதும் அப்படியேதான் இருக்கிறேன் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் தங்க ஊசி என்பதற்காக எடுத்து தொண்டையில் குத்திக்கொள்ள முடியாது. அதேபோலவே நான் சினிமாக்காரன் என்பதற்காக எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கவும் முடியாது. சினிமா வியாபாரம் நோக்கம் கொண்டதுதான் ஆனால் அரசியல் என்பது வியாபாரம் இல்லை. எனவே ஊருகாயாக தொட்டுக்கொள்ள வேண்டிய விஷயங்களை தயிர்சாதம் போன்று மொத்தமாகப் பிசைந்து வியாபாரம் செய்வது நெருடலாகவே இருக்கிறது...

சினிமாவில் அரசியலை காட்டுவது ஆரோக்கியமானது ஆனால் அரசியலையே சினிமாவாக்கி சம்பாதிக்க முயல்வது ஆரோக்கியமானதில்லை. எனவே ஜாதிப் பெருமை பேச நினைப்பவர்கள் சங்கம் அமைத்துக் கொண்டாடுங்கள். அரசியல் பிரச்சாம் செய்ய நினைப்பவர்கள் மேடையமைத்துக் கொள்கையை பரப்புங்கள். அல்லது சோஷியல் மீடியாவில் கட்டுரையாக எழுதுங்கள். பத்திரிகை, தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிடுங்கள். ஏனென்றால் அரசியல் பிரச்சாரத்தையே வியாபாரமாக்க முயற்சிப்பவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்வார்கள்? என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இன்றைய மக்கள் ஏமாளிகள் இல்லை என்பதை புரிந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது!!

- எழுத்ததிகாரன்.

Message reputation : 100% (2 votes)
Nandhakumar#2
Nandhakumar
New Member
14/11/2018, 5:26 pm
நல்ல சிந்தனை...

GURU JI#3
GURU JI
New Member
23/3/2019, 8:08 am
அருமை பதிவு.

Sponsored content#4

பிரச்சார மேடையாகிறதா சினிமா?

Posted In: Eyes Line

Topic No: 117


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO